பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் பா.ஜனதா எம்.எல்.சி. போராட்டம்
சுங்கக்கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் பா.ஜனதா எம்.எல்.சி. போராட்டம் நடத்தினார்.
மைசூரு:
சுங்கக்கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் பா.ஜனதா எம்.எல்.சி. போராட்டம் நடத்தினார்.
விரைவுச்சாலை
பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 வழி விரைவுச்சாலையாகவும், 4 வழி சர்வீஸ் சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையை கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிலையில் 6 வழி விரைவுச்சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் சர்வீஸ் சாலைகள் இன்னும் முழுமையாக அமைக்கப்படாத நிலையில், விரைவுச்சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது சரியல்ல என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பா.ஜனதா எம்.எல்.சி. போராட்டம்
இந்த நிலையில், பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா எம்.எல்.சி. விஸ்வநாத் தலைமையில் நேற்று விரைவுச்சாலையில் போராட்டம் நடந்தது.
அப்போது அவர் கூறுகையில், 10 வழிச்சாலை அமைப்பதாக கூறி நெடுஞ்சாலைதுறையும், பிரதாப் சிம்ஹா எம்.பி.யும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். பெங்களூரு-மைசூரு சாலையில் இன்னும் சர்வீஸ் சாலைகள் முழுமையாக அமைக்கப்படாத நிலையில், சுங்கக்கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. சுங்கக்கட்டணம் வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.
இந்த போராட்டத்தில் கன்னட அமைப்பினர், ஆம் ஆத்மி கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.