பா.ஜனதா அலுவலகம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் தர்ணா
கோலார் தங்கவயல் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு டிக்கெட் கொடுக்க வலியுறுத்தி கட்சி அலுவலகம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயல் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு டிக்கெட் கொடுக்க வலியுறுத்தி கட்சி அலுவலகம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலு நாயக்கருக்கு டிக்கெட்
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் சட்டசபை தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டு பா.ஜனதா கட்சியை சேர்ந்த கோலார் மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ் நாராயண், முன்னாள் எம்.எல்.ஏ. ஒய்.சம்பங்கி, மோகன் கிருஷ்ணா, சுரேஷ் பாபு உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மந்திரி முனிரத்னாவுடன் பெங்களூருவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வேலு நாயக்கர் கோலார் தங்கவயலுக்கு வந்தார். அப்போது அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதையடுத்து கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட பா.ஜனதா சார்பில் வேலு நாயக்கருக்கு டிக்கெட் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவின.
தர்ணா போராட்டம்
இந்த நிலையில் நேற்று பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒய்.சம்பங்கி, மோகன் கிருஷ்ணா ஆதரவாளர்கள் கட்சி அலுவலகம் எதிரே திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உள்ளூரை சேர்ந்தவர்களுக்கே டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது மோகன் கிருஷ்ணா, 'உள்ளூரை சேர்ந்த எனக்கு டிக்கெட் கொடுக்காவிட்டால் சுயேச்சையாக போட்டியிடுவேன். அதன் மூலம் நான் வெற்றி பெற்று சாதனை படைப்பேன்' என்றார். இதனால் கோலார் தங்கவயலில் பரபரப்பு ஏற்பட்டது.