உரிமை பத்திரம் வழங்க வேண்டும் என்று கூறி துமகூருவில் 170 குடும்பத்தினர் நூதன போராட்டம்
உரிமை பத்திரம் வழங்க வேண்டும் என்று கூறி துமகூருவில் 170 குடும்பத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், துமகூரு மாவட்டம் கொரட்டகெரே மற்றும் மதுகிரியில் வசிக்கும் 170 குடும்பத்தினர் சட்டசபை தேர்தலையொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது கொரட்டகெரே, மதுகிரியில் 170 குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு இன்னும் உரிமை பத்திரம் வழங்கவில்லை, இன்னும் சிலருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகள் கிடைக்கவில்லை. அந்த உரிமை பத்திரம், வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கிராமங்களில் அறிவிப்பு பலகை மற்றும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.
அந்த அறிவிப்பு பலகைகள் மற்றும் போஸ்டர்களில், வீட்டுமனை கொடுத்தால், வாக்கு கொடுப்போம் என்றும், தேர்தலில் வெற்றி பெற்றதும் உரிமை பத்திரம் வழங்குவோம் என்று எழுதி கொடுக்க வேண்டும், இல்லையெனில் ஓட்டுப்போட மாட்டோம் என்று எழுதி வைத்துள்ளனர். பல்வேறு கிராமங்களிலும், வீடுகள் முன்பாகவும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அறிவிப்பு பலகைகள், போஸ்டர்களை வைத்துள்ளனர். அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக எந்த வேட்பாளர் எழுதி கொடுத்து வாக்கு கேட்க உள்ளார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.