பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேத்தி: பாஜக பெண் எம்.எல்.ஏ. மரணம்
மராட்டியத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்.எல்.ஏ முக்தா திலக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர் முக்தா திலக் (வயது57). பாஜக எம்.எல்.ஏ.வான இவர் 5 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சமீபத்தில் நோய் பாதிப்பு அதிகமானது. 10 நாட்களுக்கு முன்பு புனேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகலில் திடீரென அவர் உயிரிழந்தார்.
மரணம் அடைந்த முக்தா திலக் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும், அதற்காக சிசிச்சை பெற்றுக் கொண்டே கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறை எம்.எல்.ஏ.வான இவர், புனே நகர மேயர் பதவியையும் அலங்கரித்தவர். சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேத்தி ஆவார். முக்தா திலக்கிற்கு கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நாக்பூரில் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், பெண் எம்.எல்.ஏ. ஒருவர் மரணம் அடைந்த தகவல் சட்டசபையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக சட்டசபையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.