தாய்லாந்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரக்கூன் குள்ளநரிகள் மீட்பு


தாய்லாந்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரக்கூன் குள்ளநரிகள் மீட்பு
x
தினத்தந்தி 6 Aug 2023 9:38 PM IST (Updated: 6 Aug 2023 9:38 PM IST)
t-max-icont-min-icon

தாய்லாந்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரக்கூன் குள்ளநரிகள் மீட்கப்பட்டது.

பெங்களூரு:

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வனவிலங்குகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாய்லாந்தில் இருந்து வந்த விமான பயணிகளை சோதனை செய்தனர்.

அப்போது ஒருவரது சூட்கேசில் சோதனை செய்தபோது அதில் அரிய வகை குள்ளநரி இனத்தை சேர்ந்த 2 ரக்கூன் குள்ளநரிகள் இருந்தன. இதையடுத்து அவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் சென்னையை சேர்ந்த 26 வயது வாலிபர் என்பதும், அவர் தாய்லாந்தில் இருந்து அவற்றை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்து ரக்கூன் குட்டிகளை மீட்டனர். நீண்டநேரமாக விமானத்தில் பயணித்ததால், அதில் ஒரு ரக்கூன் குட்டி செத்திருந்தது.

அதை அதிகாரிகள் விமான நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடக்கம் செய்தனர். மற்றொரு ரக்கூன் குட்டியை தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பினர். அந்த வாலிபரை பிடித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டவர் குறித்த தகவல்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


Next Story