ராதாபுரம் தேர்தல் வழக்கு: - கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பதா? - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டிப்பு


ராதாபுரம் தேர்தல் வழக்கு:  - கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பதா? - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டிப்பு
x

கோப்புப்படம்

ராதாபுரம் தேர்தல் வழக்கு விசாரணையின்போது, கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டித்தனர்.

புதுடெல்லி,

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்று அ.தி.மு.க.வின் இன்பதுரை எம்.எல்.ஏ. ஆனார். இவரது வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் அப்பாவு (தற்போதைய சபாநாயகர்) சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தலில் பதிவான தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நடைபெற்ற ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி இடைக்கால தடை விதித்தது.

புதிய மனு தாக்கல்

இதற்கிடையே இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி அப்பாவு தரப்பில் புதிய மனு தாக்கல் செயப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இன்பதுரை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, 'தற்போது கேள்விக்கு உள்ளாகி உள்ளது 2016 சட்டமன்ற தேர்தலாகும். அதில் இன்பதுரை வெற்றி பெற்றார். அப்பாவு தோல்வி அடைந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில், இன்பதுரை தோல்வி அடைந்து அப்பாவு வெற்றி பெற்றார். மேலும் சபாநாயகராகவும் உள்ளார். எனவே, இதுபோன்ற சூழலில், இந்த விவகாரம் பலன் அற்றதாகி விட்டன என வாதிட்டார்.

என்ன பலன்?

அப்போது அப்பாவு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் பி. வில்சன், ஜெய்தீப் குப்தா வழக்கு கடந்த பாதையை குறிப்பிட்டு, வாதிட முற்பட்டனர். அதற்கு நீதிபதிகள், 'இந்த விவகாரத்தை விசாரிப்பதால் ஏற்படும் பலன் என்ன?' என கேட்டனர்.

அப்பாவு வெற்றி

இதற்கு மூத்த வக்கீல் பி.வில்சன், 'அப்பாவு வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும். சட்டப்பேரவைக்காலம் முடிந்த பிறகு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவற்றுக்கு தீர்வு காண வேண்டி உள்ளதால், இந்த விவகாரம் பலனற்றதாகி விடவில்லை, மக்கள் அப்பாவுக்கு வாக்களித்தனர். 98 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் சீலிட்ட உறையில் இருந்த அறிக்கையில், அப்பாவுக்கு 153 தபால் வாக்குகள் கிடைத்ததாகவும், இன்பதுரைக்கு ஒரு தபால் வாக்கு கிடைத்திருப்பதாகவும், 44 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும், தபால் வாக்குகளை எண்ணினால் அப்பாவு வெற்றி பெறுவார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக வாதிட்டார்.

கோர்ட்டு நேரம் வீணடிப்பு

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தை விசாரிப்பதால் என்ன பலன் என கேட்டதுடன், நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் கோர்ட்டு நேரத்தை வீணடிப்பதாக உள்ளது. தேர்தல் மீண்டும் நடந்துவிட்டதால் மனுக்கள் மீதான விசாரணை முடித்து வைக்கப்படுகின்றன என்றுதான் சொல்ல வேண்டும் என குறிப்பிட்டதுடன், 2021-ம் ஆண்டு தேர்தலில் அப்பாவு வெற்றி பெற்றிருந்தாலும், இந்த விவகாரத்தை காட்டிலும் முக்கியமான பிற வழக்குகளை விசாரிப்பது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறோம்.

இருப்பினும் இரு தரப்பினரும் வலியுறுத்தினாலும், அவசரமாக விசாரிக்க வேண்டிய விவகாரம் இல்லை எனவே, சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீட்டு மனுக்களின் வரிசையின்படி, பட்டியலிடப்படும்போது இந்த மனுக்களை விசாரிக்கிறோம் என தெரிவித்து விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.


Next Story