பிரதமர் மோடி பற்றிய கருத்து: ராகுல் காந்தி மீது மத்திய மந்திரி குற்றச்சாட்டு


பிரதமர் மோடி பற்றிய கருத்து: ராகுல் காந்தி மீது மத்திய மந்திரி குற்றச்சாட்டு
x

பிரதமர் மோடி பற்றிய கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது மத்திய மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பிரதமர் மோடியை தாக்கி பேசினார்.

அதாவது, 'பிரதமர் மோடியை கடவுளுடன் உட்கார வைத்தால், இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி அவர் கடவுளுக்கே பாடம் எடுப்பார்' என கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியை பா.ஜனதா கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்தவகையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி கிரிராஜ் சிங்கும் ராகுல் காந்தி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ராகுல் காந்தி ஒரு கோமாளி என்பது ஒட்டுமொத்த உலகுக்கும் தெரியும். இந்திய பிரதமர் வெளிநாட்டு மண்ணில் ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிநிதித்துவபடுத்துகிறார் என ஒருமுறை அவரது பாட்டி (இந்திரா) நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். அதேநேரம் அவரது பேரன் தனது வெளிநாட்டு பயணங்களில் இந்தியாவை அவமானப்படுத்துகிறார்' என குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடிக்கு ஒட்டுமொத்த உலகமும் மரியாதை அளிப்பதாக கூறிய மத்திய மந்திரி, அவரது செல்வாக்கு ராகுல் காந்தியின் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவித்தார்.


Next Story