இந்தி மட்டுமே தேசிய மொழி..? "ஒவ்வொருவருடைய தாய்மொழியும் முக்கியமானது" - ராகுல் காந்தி பதில்!


இந்தி மட்டுமே தேசிய மொழி..? ஒவ்வொருவருடைய தாய்மொழியும் முக்கியமானது - ராகுல் காந்தி பதில்!
x

கர்நாடகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார்.

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற பெயரில் மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணத்தில், இன்று 31-வது நாளாக கர்நாடக மாநிலம் தும்கூர், மாயசந்திரா பகுதியிலிருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நடைபயணத்தை தொடங்கினார். இந்த நடைபயணத்தின் போது கர்நாடக மக்கள் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நடைபயணத்தின் போது கர்நாடகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கும் எண்ணம் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான பிரியங்க் கார்கே செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்:-

கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ராகுல் காந்தி பேசுகையில், அனைவருக்கும் தாய்மொழி முக்கியம். ஒவ்வொருவருடைய தாய்மொழியும் முக்கியமானது.

அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம்.அரசியலமைப்பில் அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கும் எண்ணம் இல்லை என்றார்.

இதன்மூலம், உங்கள் மொழி(கன்னடம்) அடையாளத்தை அச்சுறுத்தும் நோக்கம் இல்லை என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்திவிட்டார்.

ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பில்லை. இந்த உரையாடலில் கலந்து கொண்டவர்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்றும் நோக்கத்திற்காகவே இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டனர்.

இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை தலைவர் ராஜீவ் கவுடா கூறுகையில், "ராகுல் காந்தியுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற பெரும்பாலானோர், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து கல்வித் துறையில் உள்ள பிரச்சனைகளையும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் எழுப்பினர்" என்று தெரிவித்தார்.


Next Story