ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
x

கோப்புப்படம்

அவதூறு வழக்குக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் எம்.எல்.எ பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனால் அவர் மக்களவை எம்.பி. பதவியை இழந்தார். இந்த உத்தரவுக்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த குஜராத் ஐகோர்ட்டு, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து, ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

குஜராத் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பு அவசர வழக்காக கடந்த செவ்வாய் அன்று விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தி தரப்பில் இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரப்பட்டது.

இந்த சூழலில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு நாளை ( ஜூலை 21ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதனிடையே ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கை பதிவு செய்த குஜராத் எம்.எல்.எ பூர்னேஷ் மோடி சுப்ரீம் கோர்ட்டில், தனது கருத்துக்களை கேட்காமல் இந்த வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அவர் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story