ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: காங்கிரஸ் கட்சியின் சத்தியாகிரக போராட்டம் நிறைவு...!
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று சத்தியாகிரக போராட்டம் நடத்தியது.
டெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு 'அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
மோடி சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.
இதனிடையே, ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடைபெற்று வரும் சத்தியாகிரக போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று காலை 10 மணிக்கு சத்தியாகிரக போராட்டம் தொடங்கியது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சத்தியாகிரக போராட்டம் நிறைவடைந்துள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கிய சத்தியாகிரக போராட்டம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
சத்தியாகிரக போராட்டம் நிறைவடைந்ததையடுத்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
காங்கிரசின் சத்தியாகிரக போராட்டம் நாளையும் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறை முடிந்து நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நாளை அமளியில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.