இந்திய ஒற்றுமை பாதயாத்திரை - 2வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி


இந்திய ஒற்றுமை பாதயாத்திரை - 2வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி
x
தினத்தந்தி 8 Sept 2022 7:57 AM IST (Updated: 8 Sept 2022 11:01 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ஒற்றுமை பாதயாத்திரை 2-வது நாளான இன்று ராகுல்காந்தி அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார்.

அகஸ்தீஸ்வரம்,

ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை செல்கிறார். 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற பெயரில் நடைபெறும் இந்த பாதயாத்திரையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி நேற்று முன்தினம் சென்னை வந்தார்.

பின்னர் நேற்று காலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் மனமுருக பிரார்த்தனை செய்தார். அங்கு மரக்கன்று நட்டதோடு, கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். பின்னர் அவர் சென்னை திரும்பினார்.

பின்னர் கன்னியாகுமரியில் நேற்று மாலை 4.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கிவைத்தார். அதை பெற்றுக்கொண்ட அவர் அங்கிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு கடற்கரை சாலையில் நடைபெற்ற பொதுக்குழுவில் பேசினார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் கார் மூலமாக அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்கு ராகுல்காந்தி சென்றார். அங்குள்ள 'கேரவனி'ல் ஓய்வெடுத்தார். அவருடன் பாதயாத்திரை சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் தனித்தனி 'கேரவன்'களில் தங்கினார்கள்.

இன்று முதல் தினமும் ராகுல்காந்தி 25 கி.மீ. தூரம் நடக்கிறார். காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பாதயாத்திரை இரண்டு 'ஷிப்டு'களாக நடைபெறுகிறது. 11-ந் தேதியில் இருந்து ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் பாதயாத்திரையின் 2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்குகிறார். இந்நிலையில், அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கும் முன் ராகுல்காந்தி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


Next Story