குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை: அமித்ஷா


குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை: அமித்ஷா
x
தினத்தந்தி 14 March 2024 3:50 AM GMT (Updated: 14 March 2024 5:00 AM GMT)

இஸ்லாமியர்களுக்கும் கூட குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான உரிமை உள்ளது, யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை என்று அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.

புதுடெல்லி,

அமலுக்கு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இது தொடர்பான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை பா.ஜ.க கடுமையாக சாடியிருக்கிறது. இந்த சட்டம் தொடர்பாக பொய்களை பரப்பி வகுப்புவாத உணர்வை எதிர்க்கட்சிகள் தூண்டுவதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். அமித்ஷா கூறியிருப்பதாவது:

சி.ஏ.ஏ. சட்டத்தை கண்டு சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாம் என நானே பல முறை கூறியிருக்கிறேன். மோடி அளித்த ஒவ்வொரு வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் வாக்குறுதி மட்டுமே கொடுப்பார்கள், ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். சி.ஏ.ஏ சட்டம் தொடர்பாக ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நாட்டின் குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மை உரிமை.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற மாட்டோம். கொரோனா தொற்று காரணமாகவே சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை. சி.ஏ.ஏ.விவகாரத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பொய் பேசுகிறார்கள். சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணத்தை ராகுல் காந்தி பொதுவெளியில் விளக்க வேண்டும்.

பா.ஜ.கவிற்கு அரசியல் லாபம் பெறுவது முக்கியமல்ல. நாட்டு நலனே முக்கியம். சர்ஜிக்கல் தாக்குதல், சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசியல் லாபத்திற்காக பா.ஜ.க இதை செய்வதாக சந்தேகம் எழுப்பின. அதற்காக பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா? ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370- ரத்து செய்யப்படும் என்று 1950-ல் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம்" என்றார்.


Next Story