பெண்ணின் வயிற்றில் மருத்துவ கருவி: பினராயி விஜயனுக்கு ராகுல்காந்தி கடிதம்


பெண்ணின் வயிற்றில் மருத்துவ கருவி: பினராயி விஜயனுக்கு ராகுல்காந்தி கடிதம்
x

பெண்ணின் வயிற்றில் மருத்துவ கருவி வைத்து தைத்தது தொடர்பாக பினராயி விஜயனுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

திருவனந்தபுரம்,

வயநாடு பெண்ணின் வயிற்றில் மருத்துவ கருவி வைத்து தைத்தது தொடர்பாக பினராயி விஜயனுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார். அதில், மருத்துவ கவனக்குறைவுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

5 ஆண்டுகளாக அவதி

கேரள மாநிலம் வயநாடு தொகுதியை சேர்ந்த பெண் ஹர்ஷினா. இவர், 3-வது பிரசவத்துக்காக கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம், கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, டாக்டர்கள் பயன்படுத்தும் இடுக்கி என்ற மருத்துவ சாதனத்தை அப்பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைத்து விட்டனர். இதனால் 5 ஆண்டுகளாக அவர் கடுமையான உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.

கேரள அரசு தலைமை செயலகம் எதிரே போராட்டம் நடத்தி வருகிறார்.

ராகுல்காந்தி கடிதம்

இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு வயநாடு தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளாா்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் வயநாடு சென்றிருந்தபோது, ஹர்ஷினாவைுயம், அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். ஹர்ஷினா நிலைமையை அறிந்து வேதனைப்பட்டேன். அவரது கஷ்டங்கள், அக்குடும்பத்துக்கு மனவேதனைையயும், உடல் வேதனையையும் அளித்துள்ளன. ஏராளமான நிதிஇழப்பும் ஏற்பட்டுள்ளது. ஹர்ஷினா என்னிடம் ஒரு மனு அளித்தார்.

குறைதீர்ப்பு முறை

ஹர்ஷினாவின் பரிதாப நிலையை பரிசீலித்து, அவருக்கு ஏற்கனவே அளித்த ரூ.2 லட்சத்துடன் போதிய இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன், மருத்துவ கவனக்குறைவுக்கு எதிராக போதிய பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்த வேண்டும். அத்தகைய கவனக்குறைவை கையாள உறுதியான குறைதீர்ப்பு முறையை கொண்டுவர வேண்டும். அதன்மூலம், பாதிக்கப்பட்டவர்கள் தெருவுக்கு வந்து போராடுவதை தடுக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

கவனக்குறைவு

இதற்கிடையே, கேரள போலீசார் நடத்திய விசாரணையில், டாக்டர்கள் கவனக்குறைவாக செயல்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், போலீசாரின் அறிக்கையை மருத்துவ வாரியம் நிராகரித்துள்ளது.


Next Story