பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா முன் ராகுல் காந்தி அடிபணிந்து போகமாட்டார்: ஆதிர் ரஞ்சன் எம்.பி.


பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா முன் ராகுல் காந்தி அடிபணிந்து போகமாட்டார்: ஆதிர் ரஞ்சன் எம்.பி.
x

பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா முன் ராகுல் காந்தி அடிபணிந்து போகமாட்டார் என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டது.

எனினும், கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்து உள்ளது. இந்த சூழலில், அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என பேசியதற்காக ராகுல் காந்தி மீது மற்றொரு அவதூறு வழக்கு பாய்ந்து உள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காக மற்றொரு அவதூறு வழக்கும் ராகுல் காந்தி மீது பதிவாகி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, ராகுல் காந்தி ஏன் அவரது வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு போகவில்லை என பா.ஜ.க. ஒருபுறம் கூறி வருகிறது.

அதனை அவர் செய்யும்போது, அதில் பா.ஜ.க.வுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. பயந்து போகமாட்டேன் என ராகுல் காந்தி கூறியிருக்கிறார். அதனால், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா முன் ராகுல் காந்தி அடிபணிந்து போகமாட்டார். அவர் நீதிமன்றத்திற்கு செல்வார் என கூறியுள்ளார்.

சூரத் நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து ராகுல் காந்தி, குஜராத்தின் சூரத் நகரில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்ய சென்றுள்ளார். அதற்கு முன் டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு வருகை தந்த அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொண்டன்ர்.


Next Story