மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்- ராகுல் காந்தி


மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்- ராகுல் காந்தி
x

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பட்டதாரிகள் மத்தியில் ராகுல்காந்தி கூறினார்.

பாதயாத்திரை

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடந்த 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.

அவர் குமரி மாவட்ட நடை பயணத்தை முடித்துக்கொண்டு, 11-ந்தேதி முதல் கேரள மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். முன்தினம் இரவு கருணாகப்பள்ளி ராஜாஜி சந்திப்பில் பாதயாத்திரையை முடித்தார்.

கேரளாவில் 6-வது நாள் பாதயாத்திரையை காலை 7 மணிக்கு கருணாகப்பள்ளியில் இருந்து ராகுல்காந்தி தொடங்கினார். 8.30 மணிக்கு ஆலப்புழை மாவட்ட எல்லையான ஒச்சிரை கிருஷ்ணபுரத்திற்கு பாதயாத்திரை வந்து சேர்ந்தது. அங்கு ஆலப்புழை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாபு பிரசாத் தலைமையில் தொண்டர்கள் ராகுல் காந்திக்கு வரவேற்பு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து ராகுல்காந்தி காலை 10 மணிக்கு காயங்குளம் வந்து சேர்ந்தார்.

அவருடன் மாநில தலைவர் சுதாகரன் மற்றும் எம்.பி.க்கள் கொடிக்குன்னில் சுரேஷ், கே. முரளீதரன் ஆகியோரும் நடந்து வந்தனர்.

இளைஞர்கள் சந்திப்பு

பாதயாத்திரையின் போது, "எங்களுக்கு வேலை தேவை" என்ற கோரிக்கை அட்டையை ஏந்தியவாறு, பட்டதாரி இளைஞர்கள் பலர் ராகுல் காந்தியை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்கவில்லை. ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு வேலை தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த மத்திய அரசும் ஏமாற்றி விட்டது. புதிதாக ஒருவருக்கு கூட வேலை வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூடு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதுபோலவே தனியார் நிறுவனங்களும் மூடும் தருவாயில் உள்ளது என்று பட்டதாரி இளைஞர்கள் ராகுல் காந்தியிடம் முறையிட்டனர்.

கூடுதல் வேலை வாய்ப்புகள்

அதற்கு பதில் அளித்து பேசும் போது ராகுல்காந்தி கூறியதாவது:- இளைஞர்கள், பட்டதாரிகளை மத்திய அரசு ஏமாற்றி விட்டது. ரெயில்வே உள்பட தற்போது உள்ள காலி பணியிடங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளன. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் மீண்டும் அரசு அமைந்ததும் கூடுதல் தொழில், வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து ராகுல் காந்தியும், அவருடன் பாதயாத்திரை வந்தவர்களும் காயங்குளத்தில் ஒய்வு எடுத்தனர். மதியம் 1 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்கு பின், 2 மணிக்கு ராகுல்காந்தி பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் 3 மணிக்கு இளைஞர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.


Next Story