கர்நாடகத்தில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நிறைவு


கர்நாடகத்தில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நிறைவு
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 22 நாட்கள் நடைபெற்ற ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை நேற்றுடன் நிறைவு பெற்றது. பாதயாத்திரைக்கு ஆதரவு அளித்த கர்நாடக மக்களுக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்தார்.

பெங்களூரு:

இந்தியா ஒற்றுமை பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்தியா ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த மாதம் செப்டம்பர் 7-ந் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கினார். அந்த பாதயாத்திரை கேரளாவுக்கு சென்று, 19 நாட்கள் நடைபெற்றது. அதன்பிறகு, கடந்த மாதம் 30-ந் தேதி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு வந்தது. அன்றைய தினம் ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு, கடந்த மாதம் 30-ந் தேதியில் இருந்து நேற்று வரை ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். அதாவது சாம்ராஜ்நகர், மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா, பல்லாரியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கடந்த 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் ஆந்திராவில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடைபெற்றது. பின்னர் கடந்த 21-ந் தேதி ராகுல்காந்தியின் பாதயாத்திரை மீண்டும் கர்நாடகத்திற்கு வந்தது.

ராகுல்காந்தி பாதயாத்திரை நிறைவு

அதாவது கர்நாடக மாநில எல்லையில் உள்ள ராய்ச்சூரில் நடைபெற்றது. நேற்று 18-வது நாளாக ராய்ச்சூர் மாவட்டம் பி.எச்.இ.எல். அலுவலகம் அருகே யர்மாருஸ் பகுதியில் இருந்து ராகுல்காந்தியின் பாதயாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரையில் ராகுல்காந்தியுடன் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள்.

பின்னர் ராகுல்காந்தியின் பாதயாத்திரை தெலுங்கானா மாநிலத்தை சென்றடைந்தது. இதையடுத்து, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் அனுமூலரேவந்த் ரெட்டியிடம் தேசிய கொடியை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் வழங்கினார்கள். இதையடுத்து, கர்நாடகத்தில் கடந்த மாதம் 30-ந் தேதியில் இருந்து நடைபெற்ற ராகுல்காந்தியின் பாதயாத்திரை நிறைவு பெற்றது. முன்னாக ராய்ச்சூரில் வைத்து ராகுல்காந்தி பேசியதாவது:-

கர்நாடக மக்களுக்கு நன்றி

மகாகவி குவெம்பு, இந்த பூமியை அனைத்து மக்களின் அமைதி தோட்டம் என்று கூறி இருந்தார். அவர் கூறியபடி கன்னட நாடு அமைதி தோட்டம் ஆகும். இந்தியா ஒற்றுமை யாத்திரையின் மூலம் குவெம்புவின் கருத்து மீண்டும் நிரூபணமாகி உள்ளது. கர்நாடக மக்கள் இந்த பாதயாத்திரைக்கு பெரும் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இதற்காக கன்னட மக்களுக்கு எனது இதய பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

எனது பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்த போது, மக்கள் பெரும் வரவேற்பு அளித்ததை மறக்க முடியாது. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த நாட்டின் இளைஞர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை. சிறு தொழில்களை நடத்தி வருபவர்கள் உரிய ஆதரவு இல்லாமல், தங்களது தொழில்களை விட்டு வருகின்றனர்.

பிளகை ஏற்படுத்த காங்கிரஸ்...

அமைதி தோட்டமாக திகழும் கர்நாடகத்தில், பா.ஜனதாவால் விரோதம், பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது. கர்நாடக தலைவர்கள், கோடிக்கணக்கான மக்களின் ஆதரவுடன் பா.ஜனதாவின் முயற்சி தடுக்கப்படும். பசவண்ணரின் போதனைகள்படி கர்நாடகத்தில் பா.ஜனதாவினர் நடந்து கொள்கிறார்களா?. மற்ற மாநிலங்களுக்கு முன்மாதியாக விளங்கிய கர்நாடகம் தற்போது 40 சதவீத கமிஷன் அரசாக நடந்து வருகிறது.

பா.ஜனதா அரசுக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் கற்பிக்கும் நேரம் வந்து விட்டது.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.


Next Story