ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - அமித்ஷாவுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்


ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - அமித்ஷாவுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
x
தினத்தந்தி 24 Jan 2024 6:39 AM GMT (Updated: 24 Jan 2024 7:07 AM GMT)

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய அசாம் முதல்-மந்திரிக்கு அறிவுறுத்த வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூர் முதல் மும்பை வரை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் அசாம் தலைநகர் கவுகாத்தி செல்வதற்கு ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி முன்னேறினர். இதனை போலீசார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே யாத்திரையின்போது வன்முறையை தூண்டியதாக ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் மீது அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது;-

"இந்திய மக்களிடம் நீதி மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை கொண்டு சேர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 14-ந்தேதி 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 18-ந்தேதி ராகுல் காந்தியின் யாத்திரை அசாம் மாநிலத்திற்குள் நுழைந்ததில் இருந்தே ஒவ்வொரு நாளும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்தை பா.ஜ.க. தொண்டர்கள் உடைத்து நெருங்க அசாம் போலீசார் அனுமதிக்கின்றனர். ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.

அனைத்து இடையூறுகளுக்கு மத்தியிலும் ராகுல் காந்தி திட்டமிட்டபடி யாத்திரையை மேற்கொண்டுள்ளார். எனவே மத்திய உள்துறை மந்திரி இதில் தலையிட்டு, ராகுல் காந்தி மற்றும் அவருடன் யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அசாம் முதல்-மந்திரி மற்றும் காவல்துறை டி.ஜி.பி.க்கு அறிவுறுத்த வேண்டும்."

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story