நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா?
பெங்களூருவில் இருந்து புறப்படும் நீண்ட தூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரு உலக அளவில் பிரசித்தி பெற்ற நகரம். இதனால் பெங்களூருவுக்கு தொழில் விஷயமாகவும், வேலை விஷயமாகவும், சுற்றுலா செல்லவும் தினமும் லட்சக்கணக்கானோர் ரெயில்களில் இங்கு வருகிறார்கள். 55 ஆண்டு பழமையான பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இயங்குகிறது. இங்கிருந்து சென்னை, வேலூர், காஞ்சீபுரம், டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இங்குள்ள 10 பிளாட்பாரங்களில் இருந்து தினமும் சராசரி 119 ரெயில்கள் இயங்குகின்றன. சுமார் 5½ லட்சம் பயணிகள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் கிராந்தி வீரா சங்கொள்ளி ராயண்ணா ரெயில் நிலையம் என அழைக்கப்படுகிறது. அதுபோல் யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம் (கிருஷ்ணராஜ புரம்), பையப்பனஹள்ளி ரெயில்வே முனையத்தில் இருந்தும் சேலம், நாகர்கோவில், கோழிக்கோடு, திருவனந்தபுரம், மும்பை, புனே, ஆந்திரா உள்ளிட்ட நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் 30 ரெயில்கள் இயக்கப்படுகிறது. இங்கு 7 நடைமேடைகள் உள்ளன. யஷ்வந்தபுரத்தில் 6 நடைமேடைகளில் இருந்து தினமும் 126 ரெயில்களும், அதுபோல் 153 ஆண்டுகள் பழமையான மைசூரு ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, சேலம், மதுரை, ராமேசுவரம், சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இங்கு 5 நடை மேடைகளில் இருந்து தினமும் 50 ரெயில்கள் பல நகரங்களுக்கு புறப்பட்டு செல்கிறது. சுமார் 60 ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் மங்களூரு சென்டிரல், சந்திப்பு ரெயில் நிலையங்களில் இருந்து கோழிக்கோடு, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு சுமார் 10 ரெயில்கள் செல்கின்றன. மேலும் புனே, கோவா, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் ரெயில்கள் செல்கின்றன.
லட்சக்கணக்கில் வந்து செல்லும் பயணிகளுக்கு ரெயில்களிலும், பிளாட்பாரங்களிலும் போதிய வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்து தந்து உள்ளதா? அவை போதுமானதாக இருக்கிறதா? என்பது குறித்து பயணிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர்.
தரமற்ற உணவு
பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலரும், அடிக்கடி ரெயில் பயணங்களை மேற்கொள்பவருமான ராமச்சந்திரன்:-
"நான் எனது தொழில் விஷயமாக அடிக்கடி சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு ரெயிலில் சென்று வருவது உண்டு. முக்கிய பிரச்சினை என்னவென்றால், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ஆண்-பெண் என்று குறிப்பிடுகிறோம். ஆனால் சில நேரங்களில் பெண்கள் இடத்தில் ஆண்களுக்கு படுக்கையை ஒதுக்குகிறார்கள். இதனால் தேவையற்ற பிரச்சினை ஏற்படுகிறது. இத்தகைய அனுபவம் எனக்கு ஏற்பட்டது. இதை சரிசெய்ய வேண்டும். அதிக பணம் பெற்றுக்கொண்டு தரமற்ற உணவுகளை வழங்குகிறார்கள். கழிவறையை பராமரிப்பது இல்லை. ரெயில்களில் உணவு பொருட்களை விற்க உரிய உரிமம் அளிக்கப்படுகிறது. ஆனால் உரிமம் பெறாதவர்களும் ரெயில் பெட்டிக்குள் ஏறி உணவுகளை விற்கிறார்கள். அதில் குற்றவாளிகளும் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. அதனால் உரிமம் பெற்ற வியாபாரிகள் அடையாள அட்டையை கழுத்தில் மாட்டி கொண்டு பொருட்களை விற்பனை செய்வதை கட்டாயமாக்க வேண்டும். பயணிகளும் தாம் இருக்கும் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பொருட்களை சாப்பிட்டுவிட்டு அதன் கழிவுகளை அங்கேயே போடுகிறார்கள். இதனால் ரெயில் பெட்டிகளில் அசுத்தம் ஏற்படுகின்றன".
பெங்களூரு சாந்திநகரை சேர்ந்த கிருஷ்ணா:-
நான் அடிக்கடி வெளியூர் செல்லும்போது ரெயில் பயணத்தையே தேர்வு செய்கிறேன். ரெயிலில் சென்றால் நமக்கு உடல் சோர்வு ஏற்படாமல் தூங்கியபடி பயணிக்கலாம். ஆனால் ரெயில்களில் தரமான உணவு கிடைப்பது இல்லை. அதிக விலைக்கு உணவுகளை விற்கிறார்கள். அதற்கேற்ப அதன் தரம் இருப்பது இல்லை. இதில் ரெயில்வே அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். மேலும் ரெயில்களில் பயணம் செய்கிறவர்கள், உணவு பொருட்களை சாப்பிட்டுவிட்டு அதன் கழிவுகளை கண்ட இடங்களில் போடுகிறார்கள். இதனால் அங்கு அசுத்தமான நிலை ஏற்படுகிறது. பயணிகளும் தூய்மையை பராமரிக்க வேண்டியது அவசியம். கழிவறையை இன்னும் சுத்தமாக பராமரித்தால் நன்றாக இருக்கும். ஆங்காங்கே செல்போன் சார்ஜர் பாயிண்டுகள் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான பாயிண்டுகள் வேலை செய்வது இல்லை. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. அவ்வப்போது இவற்றை பரிசோதித்து சரிபார்க்க வேண்டும். பயணிகளில் சிலர் சிகரெட் பிடிக்கிறார்கள். குளு குளு வசதியுடைய பெட்டியிலேயே சிலா் புகை பிடிக்கிறார்கள். இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரப்பான் பூச்சி தொல்லை
சிவமொக்கா டவுன் புத்தா நகரை சேர்ந்த சேகர்:-
பெங்களூருவில் இருந்து சேலம், மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர், நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட தமிழகம் செல்லும் அனைத்து ெரயில்களிலும் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும். கரப்பான் பூச்சி தொல்லைகள் உள்ளன. இதை கட்டுப்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அது கொரோனாவுக்கு பின் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த சலுகை மீண்டும் வழங்க வேண்டும். ரெயில்களில் வினியோகிக்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளை ரெயில்வே அமைச்சகம் சரி செய்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீண்ட தூர ரெயில் பயணம் என்பது இனிமையானதாக அமையும்.
சிக்கமகளூரு சங்கர்புரா பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி குமார்:-
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கும், வட மாநிலத்திற்கும் செல்லும் ெரயில்களில் முன்பதிவு டிக்கெட் பதிவு செய்ய முடிவதில்லை. முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கேட்ட இருக்கை ஒதுக்கப்படும். ஆனால் இப்போது அப்படி இல்லை. நாம் கேட்ட இருக்கையை ஒதுக்குவதில்லை. ஆகையால் வயதுக்கு தகுந்தவாறு ெரயில்வே துறையினர் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் இருக்கை ஒதுக்க வேண்டும். நான் அடிக்கடி தாதர்-புதுச்சேரி ெரயிலில் வேலூர் சென்று வருகிறேன். ஆனால் அந்த ரெயில் படுக்கைகள் தூசி படர்ந்து உள்ளது. மேலும் கரப்பான் பூச்சிகள் நடமாட்டமும் உள்ளது. எனவே தினமும் ரெயில் கழிவறை, இருக்கைகளை சுத்தம் செய்ய வேண்டும். முதியவர்களுக்கு சலுகை கட்டணம் வழங்க வேண்டும்.
வாகன நிறுத்தத்தில் கட்டண கொள்ளை
மங்களூரு அருகே முடுப்பு கிராமத்தை சேர்ந்த புரோகிதர் வினய் கிருஷ்ணா:-
நான் அடிக்கடி பெங்களூரு, கோவாவுக்கு ரெயிலில் சென்று வருகிறேன். இதனால் நான் எனது கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் மங்களூரு சென்டிரல் அல்லது சந்திப்பு ரெயில் நிலையம் சென்று அங்குள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு ரெயிலில் செல்கிறேன். ரெயில் நிலைய வாகன நிறுத்தத்தில் கட்டண கொள்ளை அடிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும். அதுபோல் கொங்கன் ரெயில்வேயின் பெரும்பாலான ரெயில்கள் மராட்டியம், கோவா, கேரளாவுக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் செல்போன், பயணிகளின் பை, பணம், நகைகள் திருடப்படுகிறது. மேலும் கஞ்சா உள்ளிட்டவை கடத்தி வரப்படுகிறது. ரெயில்களில் நடைபெறும் திருட்டை தடுக்க ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தலாம். மேலும் முன்பு ஒரு ரெயிலில் ஒரு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார். ஆனால் தற்போது அவ்வாறு போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதே தெரியவில்லை.
கூடுதல் முன்பதிவு இல்லா பெட்டிகள்
மைசூருவில் இருந்து சென்னைக்கு பயணித்துக் கொண்டிருந்த நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பாலசுப்பிரமணி:-
மைசூரு பகுதியை பொறுத்தவரை ெரயில் நிலையங்கள் வளர்ச்சி அடைந்து பயணிகளுக்கு நல்ல வசதி செய்து கொடுத்துள்ளது. பயணிகளுக்கு தேவையான வசதிகள் இருந்தாலும் அதை சிலர் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. நீண்ட தூரம் பயணம் செல்லும் ெரயில்களுக்கு பெட்டிகளை அதிகரிக்க வேண்டும். உதாரணத்திற்கு இரவு நேரத்தில் மைசூருவில் இருந்து சென்னைக்கு செல்லும் சாதாரண ெரயிலில் கூட்டம் அதிகரிக்கிறது. பெங்களூரு வரை பயணிகள் எந்த ஒரு பிரச்சினையும், தொந்தரவும் இல்லாமல் பயணம் செல்கிறார்கள். ஆனால் பெங்களூருவில் இருந்து செல்லும் போது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்ட நெரிசல் அதிகரிக்கிறது. பயணிகள் இரவு முழுவதும் வாசல்களிலும், கழிவறை செல்லும் வழிகளிலும் நின்று கொண்டு பயணம் செய்கிறார்கள். இதனால் அவசரத்திற்கு பெண்கள், முதியவர்கள் கழிவறை செல்ல முடியாமல் பரிதவிக்கும் நிலை உள்ளது. எனவே கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க வேண்டும்.
மைசூரு ராமகிருஷ்ணா நகரை சேர்ந்த சுருதி:-
மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் சாமுண்டி எக்ஸ்பிரஸ் ெரயிலில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகரிக்கிறது. இதற்கு காரணம் வேலைக்கு செல்பவர்கள், வேலையை முடித்துக் கொண்டு வருபவர்களால் நெரிசல் ஏற்படுகிறது. முன்பதிவு செய்தவர்களுக்கு இருக்கை கொடுக்காமல் முன்பதிவு செய்யாதவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள். இதனால் முன்பதிவு செய்தவர்கள், முன்பதிவு செய்யாத பயணிகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டாகிறது. இதை தடுக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் பெட்டிகளில் விற்பனை செய்யும் தின்பண்டங்கள் மற்றும் உணவுகள் தரமாக இருப்பதில்லை. இதையும் சரி செய்ய ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.