கலபுரகி, கதக் மாவட்டங்களில் கனமழை; மின்னல் தாக்கி 4 பேர் பலி
கலபுரகி, கதக் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு:
கலபுரகி, கதக் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
கனமழை
கர்நாடகத்தில் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடைய மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று கலபுரகி, விஜயாப்புரா, கொப்பல், கதக் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்னல் தாக்கி கதக் மற்றும் பாகல்கோட்டையில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது கதக டவுன் லிங்டால் கிராமத்தை சேர்ந்தவர்கள் தேவராஜ் மற்றும் சரணப்பா. விவசாயிகளான இவர்கள் 2 பேரும் நேற்று அந்த பகுதியில் தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். அந்த சந்தர்ப்பத்தில் பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றி புறநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பாகல்கோட்டையில் மின்னல் தாக்கி இறந்தவர்கள் பற்றிய தகவல்கள் இல்லை.
5 ஆடுகள் செத்தன
மேலும் கதக் புறநகர் பகுதியை சேர்ந்த சிறுவன், தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றான். அப்போது கனமழை பெய்தது. அந்த சமயத்தில் மின்னல் தாக்கியதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். மேலும் மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகளும் செத்தன.
கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகாவில் கவலாகா கிராமம் உள்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி தனது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் 5 காளை மாடுகள் செத்தன. இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கிடையே அங்கு வந்த வருவாய் துறை அதிகார்கள், இறந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்தனர்.
விஜயநகர் மாவட்டம் புசுலஹட்கலி கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் தோட்டத்தில் தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். நேற்று அந்த பகுதியில் கனமழை பெய்தது. அந்த சமயத்தில் மின்னல் தாக்கியதில், அவரது வீட்டில் இருந்த தென்னை மரத்தில் தீப்பிடித்தது. சுமார் 15 நிமிடங்கள் மரத்தில் தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ, அணைந்தது. இதில் தென்னை மரம் முற்றிலும் நாசமானது.