ராஜஸ்தான்: தரமற்ற குடிநீரால் நீட் பயிற்சி மாணவர் பலி; சிகிச்சையில் 65 மாணவர்கள்
ராஜஸ்தானில் விடுதியில் தூய்மையற்ற குடிநீரை குடித்ததில் நீட் தேர்வு பயிற்சி மாணவர் உயிரிழந்து உள்ளார். 65 மாணவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
கோட்டா,
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் ஜவகர் நகர் பகுதியில் நீட் நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெறும்மாணவர்கள் விடுதி ஒன்றில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த விடுதியில் இருந்த குடிநீரில் அசுத்தம் ஏற்பட்டு உள்ளது. அது கவனிக்கப்படாமல் விடப்பட்டு உள்ளது.
இதனை அறியாமல் குடிநீரை குடித்த விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அவர்களில் வைபவ் ராய் (வயது 18) என்ற மாணவர் உயிரிழந்து உள்ளார். 65 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, உடனடியாக அவர்கள்மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ரத்தத்தில் ஹெபடைட்டிஸ் ஏ வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதுபற்றி கோட்டா நகர தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி ஜெகதீஷ் சோனி கூறும்போது, விடுதியில் உணவு மற்றும் குடிநீரின் தரம் பற்றி சோதனை செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
விடுதியில், நீர் தேர்வு பயிற்சி பெறும் மாணவர்கள் தவிர வேறு சிலரும் தரமற்ற, தூய்மையற்ற குடிநீரால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.