ராஜஸ்தான்; மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையின் லிப்டிற்குள் ஸ்கூட்டரில் சென்ற தந்தை


ராஜஸ்தான்; மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையின் லிப்டிற்குள் ஸ்கூட்டரில் சென்ற தந்தை
x

ராஜஸ்தானில் மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையின் லிப்டிற்குள் தந்தை ஸ்கூட்டரில் சென்ற வீடியோ சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

கோட்டா,

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் எம்.பி.எஸ். மருத்துவமனைக்கு மனோஜ் ஜெயின் என்ற வழக்கறிஞர் தனது ஸ்கூட்டரில் சென்று உள்ளார்.

அவரது மகன் காயமடைந்த நிலையில், சிகிச்சை அளிப்பதற்காக ஸ்கூட்டரில் நேராக லிப்டிற்குள் சென்று உள்ளார். இதுபற்றிய வீடியோ வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது.

இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்தின் துணை கண்காணிப்பாளர் கர்னேஷ் கோயல் கூறும்போது, மனோஜின் ஸ்கூட்டரை வாசல் பகுதி வரை செல்லவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர் மருத்துவமனையின் லிப்டுக்குள் தனது மகனுடன் ஸ்கூட்டரை ஓட்டி சென்றுள்ளார் என தெரிவித்து உள்ளார்.

வீல்சேர் வேண்டும் என்று மனோஜ் கேட்டுள்ளார். அவருக்கு தேவையான வீல்சேர் வசதி இல்லை. இதனால், மருத்துவமனை நிர்வாகம் அவர் ஸ்கூட்டரில் வாசல் பகுதி வரை செல்ல மட்டுமே அனுமதித்த நிலையில், அதனை மீறி அவர் லிப்டிற்குள் ஸ்கூட்டருடன் சென்று உள்ளார் என கோயல் கூறியுள்ளார்.

அதனால், அவரது ஸ்கூட்டரின் சாவியை நிர்வாகம் எடுத்து கொண்டது என கூறியுள்ளார். எனினும், மனோஜ் கூறும்போது, மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வீல்சேர் கேட்டேன். அவர்கள் அதனை வழங்கவில்லை.

எனது மகனுடன் என்னுடைய மின்சார ஸ்கூட்டரில் லிப்டுக்குள் செல்லட்டுமா? என நான் கேட்டேன். அதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்தனர் என கூறியுள்ளார்.


Next Story