ராஜஸ்தானில் ராஜபுத்திர இளைஞர் அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை: மாநிலம் முழுவதும் பதற்றம்


ராஜஸ்தானில் ராஜபுத்திர இளைஞர் அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை: மாநிலம் முழுவதும் பதற்றம்
x

Image Courtacy: ANI

தினத்தந்தி 6 Dec 2023 10:17 PM GMT (Updated: 7 Dec 2023 6:42 AM GMT)

சுக்தேவ் சிங் கோகமெடியின் பாதுகாவலர்கள் சுட்டதில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி. இவர் ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து பிரிந்து 2015ம் ஆண்டு ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு 2018ம் ஆண்டு வெளியான பத்மாவதி திரைப்படத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தியது.

இந்த சூழலில், சுக்தேவ் சிங் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் 3 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுக்தேவ் சிங் கோகமெடியும், அவருடன் இருந்த நவீன் சிங் ஷெகாவத் என்பவரும் பலியாகினர்.

முன்னதாக சுக்தேவ் சிங் கோகமெடியின் பாதுகாவலர்கள் சுட்டதில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனிடையே ராஜபுத்திர இளைஞர் அமைப்பின் தலைவர் வீடு புகுந்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு ராஜபுத்திர சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த ராஷ்டிரிய ராஜபுத்திர கர்னி சேனா உள்பட பல்வேறு ராஜபுத்திர அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

அதன்படி ராஜஸ்தானில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. தலைநகர் ஜெய்ப்பூரில் காலை முதல் அனைத்து சந்தைகளும் மூடப்பட்டிருந்தன. போராட்டக்காரர்கள் சாலைகளில் திரண்டு டயர்களை எரித்தும், கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது என்கவுண்ட்டர் செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். முழு அடைப்பு போராட்டம் காரணமாக, ஜெய்ப்பூர் உட்பட பல நகரங்களில் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின. பல இடங்களில் போராட்டக்காரர்கள் தண்டவாளங்களில் இறங்கி ரெயில்களை மறித்தனர். முழு அடைப்பு போராட்டத்தால் ராஜஸ்தான் முழுவதும் பதற்றம் நிலவியது.

இந்த நிலையில் சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலையில் தொடர்புடைய 2 பேரையும் வலை வீசி தேடி வருவதாக ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் பிஜு ஜார்ஜ் ஜோசப் தெரிவித்தார். இருவரில் ஒருவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் ஜோசப் கூறினார்.

இதனிடையே சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலைக்கு ராஜஸ்தானை சேர்ந்த பிரபல ரவுடி ரோஹித் கோதாரா என்பவர் பொறுப்பேற்றுள்ளார். தன்னுடைய எதிரிகளை ஆதரித்ததற்காக சுக்தேவ் சிங் கோகமெடியை கொலை செய்ததாக ரோஹித் கோதாரா பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.


Next Story