ராகுல், பிரியங்காவின் ரக்சா பந்தன் பகிர்வு
ரக்சா பந்தன் பண்டிகையையொட்டி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
புதுடெல்லி,
சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவைக் கொண்டாடும் இந்து பண்டிகை ரக்சா பந்தன். உடன்பிறப்புகளுக்கு இடையிலான பிணைப்பின் அடையாளமாக, இந்த நாளில் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. உடன் பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமின்றி தங்கள் நலனில் அக்கறை காட்டும் உறவுகள், அன்போடு பழகும் நபர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பெண்கள் ராக்கி கயிறு கட்டி மகிழ்வார்கள்.
இந்த ஆண்டு, ரக்சா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் தங்களுடைய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராகுல் காந்தி தனது பதிவில், ரக்ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் - தங்கைக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டிகை. இந்த பாதுகாப்புக் கயிறு, எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்தட்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதே போல பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது, அதில் வெவ்வேறு வண்ணங்களின் நினைவுகள், ஒற்றுமையின் கதைகள் மற்றும் நட்பை ஆழமாக்குவதற்கான மரியாதை ஆகியவை அன்பு மற்றும் பரஸ்பர புரிதலின் அடித்தளத்தில் செழித்து வளரும் என்று வாழ்த்தியுள்ளார்.