அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் முழு வேகத்தில் நடைபெறுகிறது - பிரதமர் மோடி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி,
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2020 ஆக.,5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் அடிக்கல் நாட்டப்பட்ட அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக உஜ்ஜைனியில் ஸ்ரீ மஹாகல் லோக் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, "அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோவில் கட்டும் பணி முழு வேகத்தில் நடந்து வருகிறது. காசியில் உள்ள விஸ்வநாத் தாம் இந்தியாவின் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கிறது. சோம்நாத், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களில் சாதனை வளர்ச்சியை எட்டியுள்ளது.
நாங்கள் ஆன்மீக தலங்களின் பெருமையை மீட்டெடுக்கிறோம். உஜ்ஜையினி இந்தியாவின் ஆன்மீக நெறிமுறைகளின் மையமாக இருந்து வருகிறது. உஜ்ஜையினி இந்தியாவின் புவியியல் மையம் மட்டுமல்ல, நாட்டின் ஆன்மாவின் மையமும் கூட. சிவபெருமான் உருவாக்கியதில் சாதாரணமானது எதுவுமில்லை. எல்லாம் இயற்கைக்கு அப்பாற்பட்டது, அசாதாரணமானது. மறக்க முடியாதது, நம்பமுடியாதது.
மஹாகல் லோக்கின் மகத்துவம் இணையற்றது. நாட்டின் உலகளாவிய கலாச்சார முக்கியத்துவத்திற்கு உத்வேகம் சேர்க்கும், ஜோதிர்லிங்கங்களின் வளர்ச்சி இந்தியாவின் ஆன்மீக உணர்வை வலுப்படுத்துகிறது" என்று பிரதமர் மோடி கூறினார்.