ராமர் கோவில் லட்சக்கணக்கான பக்தர்களின் கனவு; அதனை மெய்ப்பித்தவர் பிரதமர் மோடி: ஏக்நாத் ஷிண்டே புகழாரம்
அயோத்தியாவில் ராமர் கோவில் வரவேண்டும் என்பது லட்சக்கணக்கான ராம பக்தர்களின் கனவு என்றும் அதனை மெய்ப்பித்தவர் பிரதமர் மோடி என்றும் ஏக்நாத் ஷிண்டே புகழாரம் தெரிவித்து உள்ளார்.
புனே,
மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அயோத்தியாவில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவருடன் துணை முதல்-மந்திரி பட்னாவிஸ், சிவசேனா எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சென்று உள்ளனர்.
அயோத்தியாவில் ராமர் கோவிலுக்கு சென்று அவர் பார்வையிட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, கடவுள் ராமரின் ஆசிகள் எங்களுக்கு உள்ளன. அதனாலேயே, எங்களுக்கு வில் மற்றும் அம்பு சின்னம் கிடைத்தது என கூறினார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, அயோத்தியாவில் பெரிய அளவிலான ராமர் கோவில் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்பது லட்சக்கணக்கான ராம பக்தர்களின் கனவு. அதனை உண்மையாக்கியவர் பிரதமர் மோடி.
முதல்-மந்திரியானதும் முதன்முறையாக நான் அயோத்தியாவுக்கு வந்துள்ளேன். ராமர் கோவில் என்பது எங்களுக்கு அரசியல் சார்ந்த விசயம் இல்லை. அது எங்களுடைய நம்பிக்கை என்று கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து கோவில் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகி விடும். 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி மகர சங்கராந்தி நாளில், கோவில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படும். அதனை தொடர்ந்து அதே மாதத்தில், ராமர் கோவில் பக்தர்களுக்கு திறந்து விடப்படும். கோவில் கட்டி முடிப்பதற்கு மொத்தம் ரூ.1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.