'ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ராம ராஜ்ஜியத்தின் தொடக்கமாக அமையும்' - பசவராஜ் பொம்மை


ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ராம ராஜ்ஜியத்தின் தொடக்கமாக அமையும் - பசவராஜ் பொம்மை
x

கடவுள் ராமரின் கதை நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகிறது என பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் 'ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ராம ராஜ்ஜியத்தின் தொடக்கமாக அமையும்' என கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"ராம ராஜ்ஜியம் என்பது நிறைவானதும், வறுமை மற்றும் அநீதியில் இருந்து விடுதலை அளிக்கக் கூடியதும் ஆகும். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, ராம ராஜ்ஜியத்தின் தொடக்கமாக அமையும். இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தைக் காண்பது நமது அதிர்ஷ்டமாகும்.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கடவுள் ராமரை அவருக்கான இடத்தில் பிரதிஷ்டை செய்ய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இது, சரியான காலம் பிறந்துவிட்டது என்பதற்கான அறிகுறியாகும்.

கடவுள் ராமர் தனது வாழ்வில் எப்போதும் தனது நன்மதிப்புகளை விட்டுக்கொடுக்காதவர். அவரது கதை நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகிறது. குறிப்பாக வால்மீகி ராமாயணம் தந்தை மற்றும் மகன், குரு மற்றும் மாணவன், சகோதரர்கள் உள்ளிட்ட உறவுகளை மிக அழகாக எடுத்துரைக்கிறது. ஜனவரி 22-ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழா, அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும் நிகழ்வாக விளங்கும்."

இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

1 More update

Next Story