15 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு; உறவினர் கைது


15 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு; உறவினர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2022 6:45 PM GMT (Updated: 15 Nov 2022 6:46 PM GMT)

பெங்களூருவில் 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த உறவினர் கைது செய்யப்பட்டு உள்ளார். போலீசார் ரோந்து சென்றபோது அவர் சிக்கினார்.

தலகட்டபுரா:

பெங்களூருவில் 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த உறவினர் கைது செய்யப்பட்டு உள்ளார். போலீசார் ரோந்து சென்றபோது அவர் சிக்கினார்.

கடத்தி கற்பழிப்பு

பெங்களூரு தலகட்டபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் வேணுகோபால்(வயது 24). இந்த நிலையில் வேணுகோபாலுக்கும், அவரது உறவினரின் மகளான 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் இருந்தது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேணுகோபாலும், சிறுமியும் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் சிறுமியை, வேணுகோபால் அருகே உள்ள வனப்பகுதிக்கு கடத்தி சென்று கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டி சிறுமியை அவரது வீட்டில் விட்டுவிட்டு வேணுகோபால் சென்று உள்ளார்.

கைது

இந்த நிலையில் நள்ளிரவில் தலகட்டபுரா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் நடந்து வந்த வேணுகோபாலை பிடித்து போலீசார் விசாரித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது சிறுமியை கடத்தி கற்பழித்த விஷயத்தை அவர் போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து வேணுகோபாலை கைது செய்த போலீசார் அவரை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வேணுகோபால் மீது தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story