செங்கல் சூளையில் வைத்து பலாத்காரம்: மனமுடைந்த 17-வயது சிறுமி தற்கொலை
செங்கல் சூளை அருகில் உள்ள மரத்தில் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்தூர்,
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் மண்டலம் கமதம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனது தாயாருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவருடன் செங்கல் சூளை வேலைக்காக சென்றார்.
செங்கல் சூளையில் யாரும் இல்லாத நேரத்தில் கணேஷ் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் ஓடி வந்து மகளை காப்பாற்ற முயன்றார். அப்போது கணேஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டார்.
இதையடுத்து சிறுமியை மீட்ட தாய் அவளை வீட்டிற்கு அழைத்து சென்றார். தனக்கு நடந்த அவமானத்தை நினைத்து சிறுமி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், மனமுடைந்த சிறுமி செங்கல் சூளை அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த சிறுமியின் தாய் அவளது உடலை பார்த்து கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து புங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கணேஷை வலைவீசி தேடி வருகின்றனர். பலாத்காரம் செய்யப்பட்ட 17-வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.