"எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு எனது சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்கும்" - பிரதமர் மோடி


எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு எனது சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் - பிரதமர் மோடி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 29 Aug 2023 2:14 PM GMT (Updated: 29 Aug 2023 2:28 PM GMT)

சிலிண்டர் விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து, வாழ்க்கையை எளிதாக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர், "வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் சிலிண்டரின் விலையில் ரூ. 200 குறைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார். ஓணம் மற்றும் ரக்ஷா பந்தனை முன்னிட்டு நமது நாட்டின் பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு இது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது 9.6 கோடிபயனாளிகள் உள்ளனர். மேலும், 75 லட்சம் பயனாளிகளைச் சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஏற்கனவே ரூ. 200 ரூபாய் குறைவாக சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. அவர்களுக்கு தற்போது மேலும், ரூ. 200 குறையும். அந்த வகையில், பிரதமரின் உஜ்வாலா திட்ட சிலிண்டர் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ. 400 குறையும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பு எனது சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் (டுவிட்டர்), "ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். எரிவாயு விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இதுவே கடவுளின் விருப்பம்." என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


Next Story