பெங்களூருவில் மழைநீர் கால்வாய்களை மேம்படுத்த ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கீடு


பெங்களூருவில் மழைநீர் கால்வாய்களை மேம்படுத்த ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கீடு
x

பெங்களூருவில் மழைநீர் கால்வாய்களை மேம்படுத்த ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் மழைநீர் கால்வாய்களை மேம்படுத்த ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ண பைரேகவுடா, பெங்களூரு வெள்ள பாதிப்புகள் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் மழைநீர் கால்வாய்களை மேம்படுத்த ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1,500 கோடி திட்ட பணிகளுக்கு டெண்டர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். மேலும் ரூ.300 கோடி கால்வாய் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்படும். கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடங்கியுள்ளோம்.

சாலைகள் மேம்படுத்தப்படும்

பெங்களூருவில் 4 பிரதான ராஜ கால்வாய்கள் உள்ளன. 160 ஏரிகளில் உபரிநீரை வெளியேற்ற கதவுகள் அமைக்கப்படும். கடந்த 20 ஆண்டுகளில் 450 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நகரில் சாலைகளும் மேம்படுத்தப்படும். பெங்களூருவில் 633 கால்வாய்கள் உள்ளன. இதில் முதல் மற்றும் இரண்டாம் நிலை கால்வாய்களின் நீளம் 599 கிலோ மீட்டர் ஆகும். கடந்த 3 ஆண்டுகளில் 33 கிலோ மீட்டர் நீளத்திற்கு சதுர வடிவிலான கால்வாயும், 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு 'யு' வடிவ கால்வாயும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு ரூ.450 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

490 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதல் மற்றும் இரண்டாம் நிலை கால்வாய்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 469 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாயை மேம்படுத்த வேண்டியுள்ளது. பேடராயனபுரா தொகுதியில் கால்வாய்களை மேம்படுத்த ரூ.407 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியையும் கால்வாய் மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம். மகாதேவபுராவில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதியில் மட்டும் 69 ஏரிகள் நிரம்பியுள்ளன.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

கிருஷ்ண பைரேகவுடா

முன்னதாக பேசிய கிருஷ்ண பைரேகவுடா, 'பெங்களூருவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் நகரின் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த காலத்தில் கால்வாய்களை மேம்படுத்த வேண்டும்' என்றார்.


Next Story