மத விவகாரத்தில் கொலையான 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்; முதல்-மந்திரி சித்தராமையா வழங்கினார்
முந்தைய பா.ஜனதா ஆட்சியில் மத விவகாரத்தில் கொலையான 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணத்தை முதல்-மந்திரி சித்தராமையா வழங்கினார்.
பெங்களூரு:
முந்தைய பா.ஜனதா ஆட்சியில் மத விவகாரத்தில் கொலையான 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணத்தை முதல்-மந்திரி சித்தராமையா வழங்கினார்.
காங்கிரஸ் ஆட்சி
தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கடந்த 2022-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு அப்போது இருந்த பா.ஜனதா அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியது. அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் மத மோதலில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொலையான முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.
தலா ரூ.25 லட்சம்
இதையடுத்து மத பிரச்சினைகளால் கொலையான முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொலை செய்யப்பட்ட தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த தீபக் ராவ், மசூத், முகமது பாசில், அப்துல் ஜலீல், மண்டியாவை சேர்ந்த இட்ரிஸ் பாஷா, கதக்கை சேர்ந்த சமீர் ஆகிய 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணத்தை சித்தராமையா வழங்கினார். அதற்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கினார். அதன் பிறகு சித்தராமையா பேசியதாவது:-
தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகர் கொலை செய்யப்பட்ட போது முதல்-மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை அவரது வீட்டிற்கு சென்று ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கினார். அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கினார். அதே போல் கொலையான முஸ்லிம் சமூகத்தை சோ்ந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. இதுகுறித்து நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது குரல் எழுப்பினேன்.
கடும் நடவடிக்கை
மத மோதலில் இறந்தவர்களின் பெயாிலும் பா.ஜனதா அரசு பாரபட்சமாக நடந்து கொண்டது. இந்த பாரபட்சமான போக்கை நாங்கள் தற்போது சரிசெய்துள்ளோம். மத மோதலில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் இன்று (நேற்று) வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் சட்டத்தை கையில் எடுக்கும் மதவாதிகள், கலாசார காவலில் ஈடுபடுவோர், சாதி, மத மோதலில் ஈடுபடுவோருக்கு தக்க பாடம் புகட்டப்படும். கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
அப்போது விவசாய மந்திரி செலுவராயசாமி, வீட்டு வசதி மந்திரி ஜமீர்அகமதுகான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.