கர்நாடகத்தில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


கர்நாடகத்தில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x

கர்நாடகத்தில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

பருவமழை தீவிரம்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி மற்றும் மலைநாடு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் குடகு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். பின்னர் மாலை தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார். இதைதொடர்ந்து இரவு உடுப்பிக்கு சென்று அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இந்த நிலையில் நேற்று உடுப்பி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள சேதங்களை நேரில் ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி மாவட்ட கலெக்டர்களுடன் வெள்ளம் சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வெள்ளத்தை சரியான முறையில் எதிர்கொள்ள அதிகாரிகள், இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர், மாவட்ட நிர்வாகம், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் தயாராக உள்ளோம். மாவட்ட நிர்வாகங்களிடம் இருந்து வெள்ள சேதங்கள் குறித்த அறிக்கை வந்ததும் மத்திய அரசிடம் உதவி கோரப்படும்.

நிவாரண முகாம்கள்

கர்நாடகத்தில் மழைக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மாயமாகியுள்ளனர். 34 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 300-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம். 14 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மழைக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். 216 ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. விவசாயம் மற்றும் தோட்டக்கலை என மொத்தம் 355 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. தட்சிண கன்னடா மாவட்டத்தில் 429 வீடுகள், உத்தர கன்னடா மாவட்டத்தில் 437 வீடுகள், உடுப்பியில் 196 வீடுகள் என மொத்தம் 1,062 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

தலா ரூ.5 லட்சம்...

மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். இதில் மத்திய அரசு ரூ.4 லட்சம் வழங்கும். மழையால் சேதம் அடைந்த சாலைகள், பாலங்களை சீரமைக்க உடனடியாக ரூ.500 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story