ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. சகோதரர் மகன் உடல் அடக்கம்


ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. சகோதரர் மகன் உடல் அடக்கம்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

காணாமல் போனதாக தேடப்பட்ட நிலையில் காருடன் பிணமாக மீட்கப்பட்ட ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் சகோதரர் மகன் சந்திரசேகரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் அவரது சாவில் நீடிக்கும் மர்மம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்கமகளூரு:

காணாமல் போனதாக தேடப்பட்ட நிலையில் காருடன் பிணமாக மீட்கப்பட்ட ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் சகோதரர் மகன் சந்திரசேகரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் அவரது சாவில் நீடிக்கும் மர்மம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேணுகாச்சார்யாவின் சகோதரர் மகன்

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா. முன்னாள் மந்திரியான இவர், தற்போது முதல்-மந்திரியின் அரசியல் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது சகோதரர் ரமேசின் மகன் சந்திரசேகர். என்ஜினீயரிங் படித்த இவர், ரேணுகாச்சார்யாவின் அரசியல் தொடர்பான வேலைகளை செய்து வந்தார். கடந்த 30-ந்தேதி வீட்டில் இருந்து காரில் வெளியே சென்ற சந்திரசேகர் காணாமல் போனார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒன்னாளி போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் அவரை தீவிரமாக தேடிவந்தனர்.

கடந்த 5 நாட்களாக தேடியும் கிடைக்காத நிலையில் நேற்றுமுன்தினம் மாலை நியாமதி-ஒன்னாளி அருகே கடதகட்டே என்னும் கிராமத்தில் உள்ள துங்கா கால்வாயில் சந்திரேசேகரின் கார் கிடப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து கிரேன் மூலம் காரை வெளியே கொண்டுவரப்பட்டது. காருக்குள் சந்திரசேகரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது. சந்திரசேகரின் உடலை பார்த்து ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ., அவரது சகோதரர் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர் சந்திரசேகரின் உடல் தாவணகெரே அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா, தற்கொலையா அல்லது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது சரிவர தெரியவில்லை. இதுதொடர்பாக அவரது நண்பர் கிரணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் அடக்கம்

இந்த நிலையில் நேற்று ஒன்னாளியில் உள்ள ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கு சந்திரசேகரின் உடல் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்படி ரேணுகாச்சார்யா குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன் ராகவேந்திரா ஆகியோரும் நேரில் வந்து சந்திரசேகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சி.டி.ரவி எம்.எல்.ஏ. உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாலை ஒன்னாளியில் இருந்து குண்தூர் என்னும் கிராமத்திற்கு வாகனத்தில் சந்திரசேகரின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வீரசைவ லிங்காயத் சமுதாயத்தின் சம்பிரதாயப்படி பூஜைகள் செய்து தாத்தா-பாட்டி சமாதி அருகே உடல் அடக்கம் செய்யப்பட்டது. சந்திரசேகரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். குறிப்பாக லிங்காயத் சமுதாய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் அதிகளவில் கலந்துகொண்டனர்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஸ்யந்த் தலைமையில் எப்.எஸ்.எல். படையினர் சந்திரசேகர் காருடன் பிணமாக மீட்கப்பட்ட கால்வாய் பகுதியில் சாட்சி ஆதாரங்களை சேகரிக்க சுமார் 6 மணிநேரம் ஆய்வு நடத்தினர்.

மேலும் அவரது சாவில் நீடிக்கும் மர்மங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே சந்திரசேகரை கடத்தி அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை காருடன் கால்வாயில் போட்டிருப்பதாக ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கூறினார்.

இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி.அலோக் மோகன் கூறுகையில், 'சந்திரசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது. மேலும் அவரது கார் சென்று வந்த இடங்கள், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட இடம் பற்றி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


Next Story