குழந்தைகளுடன் வருபவர்களுக்கு திருப்பதி நடைபாதையில் கட்டுப்பாடு : மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி


குழந்தைகளுடன் வருபவர்களுக்கு திருப்பதி நடைபாதையில் கட்டுப்பாடு : மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி
x

கோப்புப்படம்

திருப்பதியில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்ததையடுத்து, குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மதியம் 2 மணிவரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமலை,

திருப்பதியில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்ததையடுத்து, குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மதியம் 2 மணிவரை மட்டுமே அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

5 இடங்களில் சிறுத்தை நடமாட்டம்

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை தாக்கி ஆந்திராவைச் சேர்ந்த சிறுமி பலியான சம்பவத்தை அடுத்து, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அந்த முடிவுகள் உடனடியாக நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதுதொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அலிபிரியில் இருந்து காளிகோபுரம் வரையிலான 3 இடங்கள், லட்சுமிநரசிம்மர் கோவில் மற்றும் 38-வது திருப்பம் என 5 இடங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது நேற்று முன்தினம் இரவு அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆகையால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோரை அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மட்டுமே அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 நடைபாதைகளிலும் நடந்து வர அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை

திருப்பதி மலைப்பாதைகளில் மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளன.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி விருந்தினர் மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

இதில் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 நடைபாதைகளிலும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

வனவிலங்குகள் பிரச்சினை தீரும் வரை பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானம் எடுக்கும் முடிவுகள், வழிகாட்டுதல்களுக்கு பக்தர்கள் உள்பட அனைவரும் தங்களின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story