மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து: பலி 15 ஆக உயர்வு; யோகி ஆதித்யநாத் இழப்பீடு அறிவிப்பு


மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து:  பலி 15 ஆக உயர்வு; யோகி ஆதித்யநாத் இழப்பீடு அறிவிப்பு
x

மத்திய பிரதேசத்தில் பஸ்சும், லாரியும் மோதி கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்து உள்ளது.


ரேவா,


மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியருகே சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும் லாரியும் மோதி கொண்டன. இந்த விபத்தில் பயணிகள் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 40 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 20 பேர் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இருந்து கோரக்பூர் நோக்கி அந்த பஸ் சென்று கொண்டிருந்து உள்ளது. பஸ்சில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேச மாநில மக்கள் என ரேவா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு நவ்னீத் பசின் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து விபத்து நடந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. இதில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்த துயர சம்பவத்திற்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், மத்திய பிரதேச முதல்-மந்திரியிடம் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை பற்றி பேசியுள்ளேன்.

விபத்தில் உயிரிழந்த உத்தர பிரதேச குடியிருப்புவாசிகளின் உடல்களை திரும்ப கொண்டு வருவது பற்றியும் பேசியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.


Next Story