பெங்களூருவில் உயிர் பலி வாங்கும் சாலை பள்ளங்கள்...!
பெங்களூருவில் உயிர் பலி வாங்கும் சாலை பள்ளங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி உள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் உயிர் பலி வாங்கும் சாலை பள்ளங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி உள்ளனர்.
1 கோடி வாகனங்கள் ஓடுகின்றன
பூங்கா நகரம், தகவல் தொழில்நுட்ப நகரம் உள்ளிட்ட புனைப்பெயர்களால் கர்நாடக தலைநகர் பெங்களூரு அழைக்கப்படுகிறது. பெங்களூரு நகரில் ஏராளமான தொழில்கள் கொட்டி கிடக்கின்றன. வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் கிளைகளும் பெங்களூருவில் உள்ளன. இதனால் பெங்களூருவில் வெளிநாட்டினரும் வசித்து வருகின்றனர்.
மேலும் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியத்தை சேர்ந்தவர்களும் பெங்களூருவில் தங்கி வேலை மற்றும் தொழில் செய்து வருகின்றனர். இதனால் நகரில் மக்கள் தொகை 6 கோடியை தாண்டி விட்டது. பெங்களூரு நகரில் உள்ள சாலைகளில் தினமும் 1 கோடி வாகனங்கள் ஓடுகின்றன. இதனால் காலை, மாலை நேரங்களில் நகரின் பல்வேறு சாலைகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அல்லோல் பட்டு வருகிறார்கள்.
ஐகோர்ட்டு அதிரடி
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூரு நகரவாசிகளுக்கு சாலை பள்ளங்கள் பெரும் தலைவலியாக உள்ளது. அதாவது நகரில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக தெருக்கள், சாலைகள், இணைப்பு சாலைகள், வெளிவட்ட சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளம் விழுந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் கடந்த 2 ஆண்டுகளாக தொடர் கதையாக நடந்து வருகிறது. மேலும் சாலை பள்ளத்தால் விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகளின் கை, கால்கள் முறிந்த சம்பவமும் அரங்கேறி உள்ளன.
மக்களின் உயிரை காவு வாங்க காத்து இருக்கும் சாலை பள்ளங்களை மூடுவதில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். சாலை பள்ளங்களை மூட மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் பொது நல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின் போது பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. ஆனால் நீங்கள் என்ன சொல்வது? நாங்கள் என்ன கேட்பது? என்பது போல மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கை உள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இதனால் சாலை பள்ளங்களால் பெங்களூருவில் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெங்களூரு ராஜாஜிநகர் வாட்டாள் நாகராஜ் ரோட்டில் நடந்த விபத்தில் உமாதேவி என்ற பெண் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு சாலை பள்ளமே காரணம் என்று கூறி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி இருந்தனர். உமாதேவி உயிரிழந்தது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் பெங்களூருவில் சாலை பள்ளங்கள் நடக்கும் விபத்தால் ஆண்டுக்கு சராசரியாக 10 பேர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரை இதுவரை சாலை பள்ளங்களால் ஏற்பட்ட விபத்துகளில் உமாதேவியையும் சேர்த்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சாலை பள்ளங்களால் நடக்கும் விபத்துகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தான் பொறுப்பு என்று போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆண்டுக்கு ரூ.30 கோடி செலவு
ஆனால் இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்யவும் அஞ்சி வருகின்றனர். சாலை பள்ளங்களால் உயிரிழப்பு நடக்கும் நிலையில் பெங்களூருவில் ஆண்டுதோறும் 30 ஆயிரம் பள்ளங்களை மூட ரூ.30 கோடி செலவு செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் கூறி இருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாலை பள்ளத்தை மூடுவதாக கூறி அதிகாரிகள் பணத்தை கொள்ளையடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-
விபத்து நடப்பது உறுதி தான்
கார்கேவிபாளையாவில் வசித்து வரும் ஆட்டோ டிரைவரான மாரியப்பன் என்பவர் கூறுகையில், "பெங்களூருவில் உள்ள சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் ஆட்டோவை இறக்கினால் ஆட்டோவின் நிலை அவ்வளவு தான். தற்போது நகரில் பெய்து வரும் கனமழையால் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சாலை எது? பள்ளம் எது? என்று தெரியவில்லை. ஆட்டோவில் வரும் பயணிகளை பத்திரமாக இறக்கிவிட வேண்டிய கடமை டிரைவர்களுக்கு உள்ளது. சாலை பள்ளம் என்னை போன்ற டிரைவர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. சாலை பள்ளத்தால் நடக்கும் உயிரிழப்புகள் வேதனை அளிக்கிறது" என்று கூறினார்.
பேகூரை சேர்ந்த வாடகை கார் டிரைவரான அருள் என்பவர் கூறுகையில், "பெங்களூருவில் எந்த சாலையும் நல்ல நிலையில் இல்லை. பள்ளமாக இருக்கும் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 30 முதல் 40 நிமிடங்கள் ஆகிறது. சாலை பள்ளங்களில் காரை சற்று வேகமாக ஓட்டி சென்றால் விபத்து நடப்பது உறுதி தான். பள்ளத்தில் காரை இறக்கும் போது டயர்கள் சேதம் அடைகின்றன. சாலை பள்ளத்தில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரிப்பது வேதனையாக உள்ளது. சாலை பள்ளத்தால் நடக்கும் உயிரிழப்புகளை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
போர்க்கால அடிப்படையில்...
கோரமங்களாவை சேர்ந்த ஷாயிதா பானு என்ற கல்லூரி மாணவி கூறுகையில், "பெங்களூருவில் சாலை பள்ளங்களால் நடக்கும் உயிரிழப்புகளை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பள்ளங்களை மூடினால் தான் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும். தற்போது மழை பெய்து வருவதால் பள்ளங்களை மூடுவது சாத்தியம் இல்லை. மழைக்காலம் முடிந்ததும் போர்க்கால அடிப்படையில் சாலை பள்ளங்களை மூட மாநகராட்சி முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.