ஆம் ஆத்மி கவுன்சிலர்களை விலைக்கு வாங்க ரூ.100 கோடி பேரம் - சஞ்சய்சிங்


ஆம் ஆத்மி கவுன்சிலர்களை விலைக்கு வாங்க ரூ.100 கோடி பேரம் - சஞ்சய்சிங்
x

ஆம் ஆத்மி கவுன்சிலர்களில் 10 பேரை விலைக்கு வாங்க பா.ஜனதா முயற்சிப்பதாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய்சிங் குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 250 வார்டுகளில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. பா.ஜனதா 104 இடங்களில் வென்றது. 15 ஆண்டுகளாக உள்ளாட்சியில் கோலோச்சிய பா.ஜனதாவை தங்கள் கட்சி பின்னுக்கு தள்ளிய இந்த நிகழ்வை ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இதற்கிடையே, ஆம் ஆத்மி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் மேயர் பதவியை வகிக்கப்போவது பா.ஜனதாவே என அந்தக்கட்சியினர் கூறுவதால் ஒருவித குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்களில் 10 பேரை விலைக்கு வாங்க பா.ஜனதா முயற்சிப்பதாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய்சிங் குற்றம்சாட்டி உள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், "பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவர் ஆம் ஆத்மி கவுன்சிலரை அணுகி மாநில பா.ஜனதா தலைவர் பேச விரும்புகிறார் என கூறியுள்ளார். ஆம் ஆத்மி கவுன்சிலர்களின் ஆதரவை பெற ரூ.100 கோடிக்கு பட்ஜெட் வைத்திருக்கிறார்கள். இது வெறும் 10 கவுன்சிலர்களுக்கு மட்டும்தான். மற்றொரு கவுன்சிலரிடம் ரூ.50 லட்சம் தருவதாக சொல்லியிருக்கிறார்கள்" என தெரிவித்தார்.


Next Story