மகளின் திருமணத்திற்காக வங்கியில் சேமித்த பணத்தை கரையான் அரித்தது - வாடிக்கையாளர் அதிர்ச்சி


மகளின் திருமணத்திற்காக வங்கியில் சேமித்த பணத்தை கரையான் அரித்தது - வாடிக்கையாளர் அதிர்ச்சி
x

வங்கி லாக்கரில் வைக்கப்பட்ட பணத்தை கரையான் அரித்த சம்பவம் வாடிக்கையாளரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அல்கா பதக் என்ற பெண்மணி 2022 அக்டோபரில் தனியார் வங்கியின் ஆஷியானா கிளையில் உள்ள இவருடைய லாக்கரில் தன் மகளின் திருமணத்துக்காக 18 லட்சம் ரூபாய் அவர் சேமித்து வைத்திருந்தார்.

சமீபத்தில் லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க அல்கா பதக்கை வங்கி ஊழியர்கள் அழைத்தனர். இதன்படி வங்கிக்கு வந்த அவர் தனது லாக்கரை திறந்து பார்த்தார்.

அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த 18 லட்சம் ரூபாய் ரொக்கம் கரையான்களால் அரிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வங்கி ஊழியர்களிடம், அல்கா பதக் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து வங்கி தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம் என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்கியின் புதிய விதிப்படி, வங்கி லாக்கரில் பணத்தை வைப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல், தனியார் வங்கியின் லாக்கர் ஒப்பந்தத்திலும், நகைகள், ஆவணங்கள் தவிர, லாக்கரில் ரூபாய் நோட்டுகளை வைக்கக்கூடாது என்றும், திருட்டு, கொள்ளை, தீ விபத்து போன்ற சம்பவங்களால் இழக்கும் பொருட்களுக்கு மட்டுமே வங்கி பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story