சட்டசபை தேர்தலுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு; துணை பட்ஜெட் மசோதாவுக்கு ஒப்புதல்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் எதிர்பார்த்தோம்
கர்நாடக சட்டசபையில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான துணை பட்ஜெட் மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டி இருப்பதால் இந்த துணை பட்ஜெட் மசோதாவை தாக்கல் செய்துள்ளேன். மத்திய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ.10 ஆயிரம் கோடியை கர்நாடகத்திற்கு வழங்கியுள்ளது. ரூ.5 ஆயிரம் கோடி இழப்பீடாக கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அதைவிட 2 மடங்கு அதிகமாக கிடைத்துள்ளது. இதனால் நமக்கு அதிகளவில் பலன் கிடைக்கும்.
சட்டசபை தேர்தல்
இயற்கை பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1,396 கோடி, கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.750 கோடி, மின்சாரத்துறைக்கு ரூ.500 கோடி, அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 4 மிகப்பெரிய மாணவர் விடுதி கட்டுவது, ஜலதாரே திட்டம், வீட்டு வசதி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சிக்கு வளர்ச்சி பணிகளுக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
அதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ண பைரேகவுடா, "கர்நாடக அரசு வாங்கிய கடன் மாநிலத்தின் நிதி நிலைக்கு ஏற்றதாக இல்லை" என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய பசவராஜ் பொம்மை, "நான் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நடப்பு ஆண்டில் ரூ.75 ஆயிரம் கோடி கடன் வாங்குவதாக கூறி இருந்தேன். ஆனால் ரூ.63 ஆயிரம் கோடி மட்டுமே கடன் வாங்கியுள்ளோம். நாங்கள் இலக்கு நிர்ணயித்ததை விட கடன் குறைவாக வாங்கியுள்ளோம்" என்றார்.