ரூ.4 கோடி சைபர் மோசடி... டிமிக்கி கொடுத்து போலீசின் பிடியில் இருந்து தப்பிய இளம்பெண்


ரூ.4 கோடி சைபர் மோசடி... டிமிக்கி கொடுத்து போலீசின் பிடியில் இருந்து தப்பிய இளம்பெண்
x

ரெயில் ரத்லம் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது தான், சானியா தப்பி சென்ற விவரம் தெரிய வந்தது.

கோட்டா,

அரியானாவின் பரீதாபாத் நகரை சேர்ந்த இளம்பெண் சானியா (வயது 24). இவருக்கு குடியா மற்றும் சோபியா சித்திக் ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இந்நிலையில், ரூ.4 கோடி சைபர் மோசடி செய்த குற்றத்திற்காக அவருக்கு எதிராக புனே நகரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, புனே போலீசை சேர்ந்த பெண் காவலர் உள்பட 5 காவலர்கள் அரியானாவில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சானியாவை கைது செய்தனர். இதன்பின் அவரை புனே நகருக்கு துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் அழைத்து சென்றனர்.

ஆனால், ஞாயிற்று கிழமை அதிகாலை 4 மணியளவில் கைவிலங்கை எப்படியோ கழற்றி விட்டு, போலீசார் பார்க்காத தருணம் அவர்களிடம் இருந்து சானியா தப்பினார். ரெயில் ரத்லம் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது தான், சானியா தப்பி சென்ற விவரம் தெரிய வந்தது. இதனால், என்ன செய்வது? என தெரியாமல் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன்பின்னர், சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் சானியாவை தேடினர். இதில், ராஜஸ்தானின் கோட்டா நகருக்கு அவர் சென்றது தெரிந்தது. இதுபற்றி புகார் ஒன்றும் நேற்று முன்தினம் அளிக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், மாலா சாலையில் உள்ள விடுதியில் சில மணிநேரங்கள் அவர் தங்கி விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரை தேடும் பணி நடந்து வருகிறது.


Next Story