ஆர்.வி.தேஷ்பாண்டேவுக்கு, சிறந்த சட்டசபை உறுப்பினர் விருது


ஆர்.வி.தேஷ்பாண்டேவுக்கு, சிறந்த சட்டசபை உறுப்பினர் விருது
x

நடப்பு ஆண்டில் கர்நாடக சட்டசபையின் சிறந்த உறுப்பினர் விருதை ஆர்.வி.தேஷ்பாண்டேவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார்.

பெலகாவி:

நடப்பு ஆண்டில் கர்நாடக சட்டசபையின் சிறந்த உறுப்பினர் விருதை ஆர்.வி.தேஷ்பாண்டேவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார்.

பொருளாதார மாற்றம்

கா்நாடக சட்டசபையில் சிறப்பாக செயல்படும் எம்.எல்.ஏ. ஒருவரை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து அவருக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடப்பு ஆண்டின் சிறந்த சட்டசபை உறுப்பினராக மூத்த எம்.எல்.ஏ. ஆர்.வி.தேஷ்பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவருக்கு விருது வழங்கும் விழா பெலகாவியில் நேற்று நடைபெற்றது.

இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, அவருக்கு விருது வழங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் தொழில் கொள்கையை வகுப்பதிலும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும் ஆர்.வி.தேஷ்பாண்டே முக்கிய பங்காற்றியுள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை கொண்டவர். தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார மாற்றம், உலக மயம், தொழில்மயத்தால் கிடைத்த பயனை கர்நாடகத்திற்கு கொண்டு வந்தவர்.

ஊக்கப்படுத்தினார்

டோயோட்டா கார் உற்பத்தி நிறுவனத்திற்கு சலுகைகளை வழங்கி அவற்றை ஊக்கப்படுத்தினார். சிறப்பாக செயல்பட்ட எம்.எல்.ஏ. விருது மூத்த தலைவருக்கு கிடைத்து இருப்பது அந்த விருது மீதான மரியாதையை அதிகரித்துள்ளது. சட்டசபைக்கு அவர் 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தகுதியான ஒருவர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எளிமை, நல்ல பண்பு, மாநிலம் மற்றும் நாட்டின் நலத்திற்கு சிந்திப்பவர், கர்நாடக அரசியலில் தனி முத்திரை பதித்துள்ளார். அவர் தனது தொகுதியில் பெரிய அளவில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு மக்களின் மனங்களை வென்றுள்ளார். மிகுந்த அக்கறையுடன் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கிறார். மக்கள் பிரச்சினைகள் குறித்து மனுக்களை கொடுத்தால் அதை படித்து அவற்றுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கிறார்.

பேசிய பேச்சுகள்

ஆர்.வி.தேஷ்பாண்டே கடந்து வந்த பாதை அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கும். புதிதாக சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.க்கள், அவர் இங்கு நடந்து கொண்ட விதம், பேசிய பேச்சுகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

சபாநாயகர் காகேரி, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, சட்டத்துறை மந்திரி மாதுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story