சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 13-ந்தேதி திறப்பு
மாசி மாத பூஜையை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சார்பில் சிறப்பு பஸ்ள் இயக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி திறக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
மண்டல, மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 21-ந்தேதியுடன் நிறைவடைந்தது. 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி மாலையில் திறக்கப்படுகிறது.
இதையொட்டி அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 18-ந்தேதி வரை 5 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மாசி மாத பூஜையை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சார்பில் பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.