சித்திரை விஷு பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு


சித்திரை விஷு பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
x

கோப்புப்படம்

சித்திரை விஷு பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. 15-ந்தேதி விஷு கனி தரிசனம் நடக்கிறது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தை முன்னிட்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

அதன்படி சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெறும்.

பக்தர்கள் அனுமதி

பின்னர், 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நாளை (புதன்கிழமை) முதல் தினசரி அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 5.30 மணி முதல் 9 மணி வரை நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை ஆகியவற்றை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அதைத்தொடர்ந்து படி பூஜை ஆகியவை நடைபெறும். பின்னர் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

விஷு பண்டிகை

15-ந் தேதி சித்திரை விஷு பண்டிகையன்று வழக்கம்போல் அதிகாலை நடை திறக்கப்பட்டு அய்யப்ப சாமிக்கு முன் விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்படும். அதைத்தொடர்ந்து காலை 7.30 மணி வரை அய்யப்ப பக்தர்கள் விஷு கனி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். விஷு பண்டிகையை முன்னிட்டு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள்.

19-ந் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஆன்லைன் முன்பதிவு

9 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது


Next Story