சபரிமலை சீசன் நெய்யபிஷேக வழிபாடுகளுடன் இன்று நிறைவு


சபரிமலை சீசன் நெய்யபிஷேக வழிபாடுகளுடன் இன்று நிறைவு
x

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை டிசம்பர் 30-ந் தேதி திறக்கப்பட்டது.

சபரிமலை,

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் கோவில் நடை அடைக்கப்பட்டது.

மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை டிசம்பர் 30-ந் தேதி திறக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்ற சிறப்பு பூஜைகள், வழிபாடுகளை தொடர்ந்து கடந்த 15-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜை மற்றும் அதை தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் தோன்றிய மகர ஜோதியையும் சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.

மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவாக இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். இரவு அத்தாள பூஜைக்கு பின் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து அய்யப்ப சாமி ஊர்வலம் சரம்குத்தி வரை சென்று மீண்டும் சன்னிதானம் வந்து சேரும். அதேபோல், நாளை (சனிக்கிழமை) இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்ட பின் மாளிகப்புரம் கோவிலில் குருதி சடங்குகள் நடைபெறும்.

21-ந்தேதி காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருவாபரண ஊர்வலம் மீண்டும் பந்தளத்துக்கு புறப்படும். அதை தொடர்ந்து காலை 6 மணிக்கு நடை அடைக்கப்படும். அத்துடன் 2023-2024 மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவுபெறுகிறது.

1 More update

Next Story