"ஒடிசா மந்திரி நபா தாஸின் மறைவு வருத்தமளிக்கிறது... " பிரதமர் மோடி இரங்கல்
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒடிசா மந்திரியின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரி நபா தாஸ். இவர் புதிதாக கட்டப்பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் இன்று திறக்க ஜஹர்சுஹுடா மாவட்டம் பிரஜாராஜ்நகரின் காந்தி சவுக் பகுதிக்கு வந்தார்.
அப்போது, மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. உதவி சப்-இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மந்திரி நபா தாசை மீட்ட அவரது ஆதரவாளர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மந்திரி நபா தாஸ் புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார். புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மந்திரி நபா தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி ஒடிசா முதல் மந்திரி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மந்திரி நபா தாஸின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், " ஒடிசா அமைச்சர் நபா தாஸின் மறைவு வருத்தமளிக்கிறது. அமைச்சர் நபா தாஸின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.