பாகிஸ்தானில் வெள்ளம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி - பிரதமர் மோடி வருத்தம்


பாகிஸ்தானில் வெள்ளம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி - பிரதமர் மோடி வருத்தம்
x

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள சம்பவத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட அழிவை பார்த்து வருத்தமடைந்தேன். இந்த இயற்கைப் பேரிடரால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்து, இயல்பு நிலை விரைவில் திரும்பும் என நம்புகிறோம்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


Next Story