தலித் சாமியாரின் எச்சில் உணவை வாங்கி சாப்பிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தலித் சாமியாரின் எச்சில் உணவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாங்கி சாப்பிட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு, மே.24-
பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஜமீர் அகமதுகான். பெங்களூரு பாதராயனபுராவில் ஒரு பள்ளியில் அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் ஈத்மிலாத் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேலும் தலித் சமுதாயத்தை சேர்ந்த சாமியாரான நாராயண சுவாமியும் கலந்து கொண்டார். பின்னர் துப்புரவு தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய, 'ஜமீர் அகமது கான், சாதி மற்றும் மதத்தை விட மனிதாபிமானமும், சகோதரத்துவமும் தான் பெரியது.
நமது எல்லாருடைய சாதி ஒன்றே, அது மனிதாபிமானமாகும்' என்றார். அப்போது மேடையில் நின்றபடி பேசிய ஜமீர் அகமதுகான், அங்கு வைக்கப்பட்டு இருந்த உணவை எடுத்து சாமியாரான நாராயண சுவாமியின் வாயில் ஊட்டி விட்டார். பின்னர் சாமியாரின் வாயில் இருந்து அந்த எச்சில் உணவை எடுத்து ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ. சாப்பிட்டார். சாமியாரின் வாயில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான் உணவை எடுத்து சாப்பிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.