ஒரே பாலின ஜோடி திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு


ஒரே பாலின ஜோடி திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில்  மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 19 April 2023 10:46 PM GMT (Updated: 19 April 2023 10:47 PM GMT)

ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. அதில், இந்த விவகாரத்தில் மாநிலங்களையும் ஒரு தரப்பாக சேர்த்து அவற்றின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

2-வது நாள் விசாரணை

ஒரே பாலின (ஆண்) ஜோடிகளான ஐதராபாத்தின் சுப்ரியோ சக்கரவர்த்தி- அபய் தங், டெல்லியின் பார்த் பெரோஸ் மெஹரோத்ரா- உதய்ராஜ் ஆனந்த் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக வழக்குகளைத் தொடுத்துள்ளனர்.

இந்த வழக்குகளில், அவர்கள் தங்கள் திருமணத்துக்கு 1954-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறப்பு திருமணச்சட்டத்தின்படி சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளனர்.

இந்த வழக்குகளின் விசாரணை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வின் முன் நேற்று முன் தினம் தொடங்கியது.

நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடந்தது.

மத்திய அரசு புதிய மனு

விசாரணையின் தொடக்கத்தில் மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

* இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்தையும் கேட்க வேண்டும்.

* இந்த முக்கிய பிரச்சினையில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் தரப்பு கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று 18-ந் தேதி மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

* இந்த விவகாரத்தில், அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஒரு தரப்பாக சேர்க்கப்பட வேண்டும். அவர்களின் நிலைப்பாடும் பதிவு செய்யப்பட வேண்டும். மாற்றாக, மாநிலங்களுடனும், யூனியன் பிரதேசங்களுடனும் மத்திய அரசே கலந்தாலோசனை செய்து அவர்களது தரப்பு கருத்துகளை தொகுத்து அளிக்க அனுமதிக்க வேண்டும். அதன் பின்னர்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று வாதாடும்போது, இந்த விவகாரத்தில் மாநிலங்கள் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரம்

வழக்குதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி வாதிட்டபோது கூறியதாவது:-

ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க அரசு முன் வரவேண்டும்.

விதவைகள் மறுமண சட்டம் வந்தபோது, சமூகம் அதை ஏற்றுக்கொண்டது. சட்டம் துணிச்சலுடன் செயல்பட்டது. சமூகமும் அதைப் பின்பற்றத்தொடங்கியது.

இங்கே, ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்தை சமூகம் அங்கீகரிக்குமாறு கோர்ட்டு முன்னெடுக்க வேண்டும். இதில் அரசியல் சாசனச்சட்டம் பிரிவு 142-ன்படி, சுப்ரீம் கோர்ட்டு தனது சிறப்பு அதிகாரத்தையும், தார்மீக அதிகாரத்தையும் பயன்படுத்தி ஒரு பாலின ஜோடிகளின் திருமணத்தை சமூகம் அங்கீகரிக்கச்செய்வதுடன், ஆண்-பெண் ஜோடிகள் போல கண்ணியமான வாழ்க்கை வாழ உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மனுவுக்கு எதிர்ப்பு

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்கு வழக்குதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி எதிர்ப்பு தெரிவித்தார். அவர், "இந்த விவகாரம் அரசியல் சாசனத்தின் பொதுப்பட்டியலில் வருவதால், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அவற்றின் கருத்தைப் பெற நோட்டீஸ் அனுப்பத் தேவையில்லை" என குறிப்பிட்டார்.

மேலும், "இந்த விவகாரத்தில் நேர்மறையான உறுதிமொழி வேண்டும். ஒரே பாலின ஜோடிகள் குறைவானவர்களாக கருதப்படக்கூடாது. அவர்கள் வாழ்வதற்கான உரிமையை முழுமையாக அனுபவிக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து வாதம் நடைபெற்றது.


Next Story