சனாதன சர்ச்சை: உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


சனாதன சர்ச்சை: உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கே மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் குறித்தும், சனாதனம் குறித்தும் பல்வேறு கட்சித்தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், சனாதன விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இவர்கள் பேசியதாக வலதுசாரி ஆதரவாளர்கள் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் எதுவும் பட்டியலிடப்படாமல் இருக்கும் சூழலில், இதனை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கை தொடர்பாக பதிவாளரிடம் தெரிவிக்காமல் திடீரென வழக்கறிஞர்கள் நீதிபதியின் முன் வந்து அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் கோபமடைந்த தலைமை நீதிபதி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார்.

அத்துடன், வழக்கறிஞர்களே முறைதவறி நடந்துகொள்ளலாமா என்ற கேள்வியெழுப்பியதுடன், எந்த வழக்காக இருந்தாலும் உரிய வழிமுறைகளை வழக்கறிஞர்கள் பின்பற்றவேண்டும் என தெரிவித்தார். உரிய வழிமுறைப்படி வழக்கு குறித்து திங்கட்கிழமை முறையிடுமாறு மனுதாரருக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


Next Story