மடிகேரியில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்


மடிகேரியில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:46 PM GMT)

மடிகேரியில் தூய்மை பணியாளர் தினத்தை கொண்டாடக்கோரி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

குடகு-

மடிகேரியில் தூய்மை பணியாளர் தினத்தை கொண்டாடக்கோரி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

தூய்மை பணியாளர்கள் தினம்

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவில் ஆண்டு தோறும் செப்டம்பர் 23-ந் தேதி தூய்மை பணியாளர்கள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி தூய்மை பணியாளர்கள் தினம் கொண்டாடப்படவில்லை. இதனால் மடிகேரி நகரசபையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் மிகவும் அதிருப்தியடைந்தனர். இந்த மாதமாவது கொண்டாடப்படும் என்று எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால் நகரசபை நிர்வாகம் தூய்மை பணியாளர் தினத்தை கொண்டாட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று தூய்மை பணியாளர்கள் அனைவரும் மடிகேரி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஆண்டு தோறும் செப்டம்பர் 23-ந் தேதி கொண்டாடப்படும் தூய்மை பணியாளர்கள் தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படவில்லை.

அரசு அதிகாரிகள் வீடுகளில் வேலை

இது மிகவும் கண்டனத்திற்குரியது. இது தூய்மை பணியாளர்கள் நகரசபை நிர்வாகம் புறக்கணிப்பது போல் உள்ளது. நகரை தூய்மையாக வைத்திருக்கும் எங்களுக்கு தரமான உணவு கிடைப்பது இல்லை. இந்திரா உணவகத்தில் சாப்பிடும்படி கூறிவிடுகின்றனர். ஆனால் அங்கு சாப்பிட்டு பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அந்த உணவு தரமானதாக இல்லை. தூய்மை பணியாளர்கள் நகரசபை நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுவதற்கு மட்டுமே. ஆனால் சில அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டு வேலைகளுக்கு தூய்மை பணியாளர்களை பயன்படுத்தி கொள்கின்றனர். இதற்கு ஊதியம் எதுவும் வழங்குவது இல்ைல. இதற்கு நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

மேலும் இது தொடர்பாக நகரசபை நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். அந்த மனுவை வாங்கிய நகரசபை நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story